மலையடிவாரத்தில் விளைந்த கண்டங்கத்திரிகளை சேகரித்து விற்பனை செய்யும் விவசாயிகள்


மலையடிவாரத்தில் விளைந்த கண்டங்கத்திரிகளை சேகரித்து விற்பனை செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 8 May 2019 10:00 PM GMT (Updated: 8 May 2019 7:21 PM GMT)

பேரையூர் மலையடிவாரத்தில் விளைந்த கண்டங்கத்திரிகளை சேகரித்து விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவில் மழை பெய்யாமல் விவசாய பணிகள் முடங்கிப்போய் உள்ளது. இதனால் விவசாய பணிகள் இல்லாமல் கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரதிற்கு மாற்று விவசாய பணிகளை செய்து வருகின்றனர். வறட்சி தாவரமான கண்டங்கத்திரியை சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் கண்ட கண்டங்கத்தரி காய்களை வேரோடு பிடிங்கி அவற்றை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இதுதவிர பேரையூர், தும்மநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாய தொழிலாளர்கள் மலையடிவாரப் பகுதி, சாலை ஓரங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை பகுதி ஆகிய இடங்களில் காணப்படும் கண்டங்கத்திரி செடிகளை வேரோடு பிடிங்கி மொத்தமாக சேகரித்து, அவற்றை களத்திற்கு கொண்டு வந்து காய வைக்கின்றனர். அவை காய்ந்த பின்னர் அவற்றில் இருந்து காய், வேர், முள் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எடுக்கின்றனர். பின்னர் அவற்றை விருதுநகர், மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். சளி, இருமல், கல்லீரல் நோய்கள், சுவாச கோளாறு மற்றும் பல்வேறு நோய்களுக்கு கண்டங்கத்திரி இலை, விதை, காய், வேர் ஆகியவை மருந்தாக பயன்படுவதால், அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாய தொழிலாளர்கள் கூறும்போது, வறட்சியான நேரத்தில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. மேலும் வேறு எந்த வேலையும் கிடைக்காத நிலையில் மலையடிவாரப் பகுதிகளில் வளர்ந்துள்ள இந்த கண்டங்கத்திரியை வேரோடு பிடுங்கி, காய்களை சேகரித்து அவற்றை பதப்படுத்தி மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். மருத்துவ குணமிக்க கண்டங்கத்திரிகளை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். ஆனால் இவற்றிலும் தற்போது குறைவான வருமானமே கிடைக்கிறது. மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகளை தொடர முடியும் என்றனர்.


Next Story