தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றியது பற்றி தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி
தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி,
தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென மாற்றப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தெளிவுபடுத்த வேண்டும்
தூத்துக்குடியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அவர்களின் செயல்பாடுகளும் பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றபோது, அங்கு இருந்த வேட்பாளரிடம் தெரிவித்துவிட்டு பணியை செய்து இருந்தால், அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்து இருக்கும். ஆனால், திடீரென வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றும் பணி மேற்கொள்ளும்போது அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதனை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்ற பயம்தான் எல்லோருக்கும் உள்ளது. தன்னாட்சியாக, சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
ஸ்டாலின் முடிவு
ஆளும்கட்சியினருக்கு தோல்விபயம் இருப்பதால்தான் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. முதல்-அமைச்சராகவோ, அமைச்சராகவோ வர கனவுகூட காண முடியாத ஒருவர் இன்று தமிழக முதல்-அமைச்சராக வந்து இருக்கக்கூடிய அவலத்தை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எந்தவிதத்திலும் விமர்சிக்கும் தகுதி அவருக்கு கிடையாது. விரைவில் தமிழகம் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆக்கி காட்டும். தி.மு.க. தலைவரை தெலுங்கானா முதல்-மந்திரி உள்பட யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அலுவலகம் திறப்பு
முன்னதாக அங்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு எம்.எல்.ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story