ஊழலில் சிக்கி தவிக்கும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் - வைகோ பிரசாரம்


ஊழலில் சிக்கி தவிக்கும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் - வைகோ பிரசாரம்
x
தினத்தந்தி 8 May 2019 11:30 PM GMT (Updated: 8 May 2019 7:37 PM GMT)

ஊழலில் சிக்கி தவிக்கும் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

நாகமலைபுதுக்கோட்டை,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நாக மலைபுதுக்கோட்டையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் முடிந்த பிறகு, தி.மு.க.வின் படை வீடாக மாறும். சரவணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தி.மு.க. வெற்றி பெற்றால் நிலையூர்-கம்பிக்குடி கால்வாய், மாவிலிபட்டியில் இருந்து தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம் வழியாக தனக்கன்குளம் வரை கால்வாய்கள் அமைக்கப்பட்டு வைகை நீர் இப்பகுதிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஷ்டப்பட்டு படிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழ் மொழியே தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்துள்ளதாக கூறி மோசடியாக மத்திய அரசின் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். பொன்மலையில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத 300-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியதாக மோசடி செய்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றை தடுக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தைரியம் இல்லை.

புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், முன்பு நடந்த 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தற்போது நடைபெறவுள்ள 4 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆட்சி மாற்றம் நிகழும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கடன், கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மாணவிகளின் துப்பட்டாவை பறித்துக் கொண்டும், முழுக்கை சட்டையை வெட்டி விட்டும் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். அப்போது மாணவ-மாணவிகளின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் கூட இப்படிப்பட்ட நடைமுறைகள் இல்லை. நீட் தேர்வை தடுக்கும் திராணி இந்த ஆட்சிக்கு இல்லை.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை. பா.ஜ.க.வினர் புலவாமா தாக்குதல் சம்பவத்தை கூறி ஓட்டுக்கேட்கின்றனர். இந்திய ராணுவம் 130 கோடி மக்களுக்கு சொந்தம். அதை எந்த கட்சியும் உரிமை கோரமுடியாது. நரேந்திர மோடிக்கு காவடி தூக்கும் அ.தி.மு.க. ஆட்சி குட்கா உள்ளிட்ட ஊழல் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. எனவே இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். எனவே ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story