திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடுரோட்டில் தனியார் பஸ் டிரைவர்கள் கட்டிப்புரண்டு சண்டை


திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடுரோட்டில் தனியார் பஸ் டிரைவர்கள் கட்டிப்புரண்டு சண்டை
x
தினத்தந்தி 9 May 2019 5:00 AM IST (Updated: 9 May 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடுரோட்டில் தனியார் பஸ் டிரைவர்கள் கட்டுப்புரண்டு சண்டை போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையங்களில் இருந்து மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் பஸ் டிரைவர்களுக்கும், அரசு பஸ் டிரைவர்களுக்கும் இடையே அவ்வப்போது பஸ்களை இயக்குவது குறித்த நேரப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுவது உண்டு.

இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் பெருமாநல்லூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் நிலையத்தை விட்டு அந்த பஸ் வெளியேறியதும், அதன் பின்னால் மற்றொரு தனியார் பஸ்சும் பெருமாநல்லூருக்கு புறப்பட்டது. அப்போது பின்னால் வந்த பஸ் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றது. இதனால் 2 பஸ் டிரைவர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பஸ்சை ஓட்டினார்கள். இதனால் பஸ்களில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

பின்னர் பஸ்நிலையத்தை விட்டு பெருமாநல்லூர் ரோட்டுக்கு 2 பஸ்களும் வந்ததும் திடீரென அதை ஓட்டிய டிரைவர்கள் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் பஸ்களை விட்டு கீழே இறங்கி நடுரோட்டில் நின்று கொண்டு ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பானது. நடுரோட்டில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு, கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த பயணிகள் மற்றும் சக டிரைவர்கள், கண்டக்டர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக அரசு பஸ் டிரைவர்களுக்கும், தனியார் பஸ் டிரைவர்களுக்கும் இடையே தான் நேர பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்படும். ஆனால் இப்போது தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே நேர பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. நடுரோட்டில் நின்று 2 பஸ்களின் டிரைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொண்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பஸ்களில் பயணம் செய்த பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


Next Story