திருக்கோவிலூர் அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 7:57 PM GMT)

திருக்கோவிலூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் அகிலன் (வயது 26). இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அகிலன் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு திருக்கோவிலூரில் இருந்து டி.அத்திப்பாக்கத்துக்கு பஸ்சில் சென்றார். பின்னர் அவர் டி.அத்திப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நெடுகம்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், அகிலனை வழிமறித்து முகவரி கேட்பதுபோல் நடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலன் அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

இதில் உஷாரான ரோந்துப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டுகள் வைத்தியலிங்கம், பார்த்தசாரதி ஆகியோர், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 பேரை தேடினர். அப்போது திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த 2 பேரை, போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கரடி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அருண்குமார்(20), துறிஞ்சிப்பட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஜெயவேல்முருகன்(19) என்பதும், அகிலனிடம் செல்போன் பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரோந்துப்பிரிவு போலீசார், அருண்குமார், ஜெயவேல்முருகன் ஆகியோரை மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அகிலன் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமார் உள்பட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டனர். மேலும் வழிப்பறி செய்ய பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாரை திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் பாராட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story