கள்ளக்குறிச்சி அருகே, 4 பஸ்கள் மீது கல்வீச்சு- கண்ணாடி உடைப்பு - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


கள்ளக்குறிச்சி அருகே, 4 பஸ்கள் மீது கல்வீச்சு- கண்ணாடி உடைப்பு - 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 8 May 2019 7:57 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே 4 பஸ்கள் மீது மர்மகும்பல் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு விரைவு பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா ஈட்டியம்பட்டியை சேர்ந்த செல்லகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (வயது 37), என்பவர் ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த கேசவன்(42) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

நேற்று அதிகாலையில் அந்த பஸ் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்து, அதன் மீது கற்களை வீசியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதற்கிடையே அந்த வழியாக வந்து கொண்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு வாகனத்தின் மீதும் கல் விழுந்தது. இதில் அந்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

மர்மகும்பல் கல் வீசி தாக்கியதில் டிரைவர் பிரபாகரன் படுகாயமடைந்தார். அவரை பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த அரசு விரைவு பஸ்சை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த சமயத்தில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மேலும் 3 ஆம்னி பஸ்கள் வந்து கொண்டிருந்தன. அவை ஏமப்பேரில் உள்ள பாலம் அருகில் வந்ததும், மீண்டும் அந்த மர்மகும்பல் அடுத்தடுத்து 3 ஆம்னி பஸ்கள் மீதும் கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் 3 ஆம்னி பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது. இந்த தாக்குதலில் பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுபற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விரைந்து வந்து, சேதமடைந்த 4 பஸ்களையும் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏமப்பேரை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழை த்து சென்று விசாரணை நடத் தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story