வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது - தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்


வாக்குப்பதிவு எந்திரங்களை கோவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது - தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 May 2019 10:00 PM GMT (Updated: 8 May 2019 7:59 PM GMT)

கோவையில் இருந்து கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கூடாது என்றும் கலெக்டரிடம் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,

கோவையில் இருந்து தேனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங் கள் திடீரென கொண்டு வரப்பட்டன. தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றும் நோக்கில் இவை கொண்டு வரப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி, தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டம் நடத்தியவர் களுடன், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதித்து காண்பிக்கப்பட்டது. அப்போது அவை, வாக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாத காலி வாக்குப்பதிவு எந்திரங்கள் என்று தெரியவந்தது.

இந்நிலையில் தேர்தலை நியாயமாக நடத்தவில்லை என்றும், ஆளும் கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்றும் கூறி நாம் தமிழர் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தாலுகா அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

நள்ளிரவு 2 மணிக்கு பிறகே தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். இருப்பினும் அ.ம.மு.க.வை சேர்ந்த 2 பேர், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 3 பேர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரிதாவிடம் அனுமதி பெற்று தாலுகா அலுவலகத்திலேயே இரவில் தங்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாலுகா அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘கோவையில் இருந்து கட்டுப்பாட்டு கருவி இல்லாமல் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே வந்துள்ளன. எந்த பயன்பாட்டிற்காக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு சோதித்து காண்பித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டியில் உள்ள வாக் குச்சாவடி எண்-197, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பாலசமுத்திரம் வாக்குச்சாவடி எண்-67 ஆகிய இரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட தவறு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பது பற்றி தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும். மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது’ என்றார்.

இந்தநிலையில் நேற்று தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகாராஜன் ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பல்லவி பல்தேவிடம் மனுக்கள் அளித்தனர். அதுபோல், நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலும், கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அவர்கள் கொடுத்த மனுக்களில், ‘தேனி நாடாளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இங்கு எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய தேவை இல்லை. கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி அனுப்ப வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையருக்கு பரிந்துரை செய்வதாக அவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து அவர் கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story