திண்டுக்கல்லில் சோகம், கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


திண்டுக்கல்லில் சோகம், கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2019 11:15 PM GMT (Updated: 8 May 2019 7:59 PM GMT)

திண்டுக்கல்லில், கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12-வது குறுக்குத்தெருவில் உள்ள மேற்கு அசோக்நகரை சேர்ந்தவர் தனசேகரன். அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களது மகள் செவ்வந்தி (வயது 19). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனசேகரன் இறந்துவிட்டார். இதையடுத்து கூலி வேலை செய்தும், உறவினர் கள் உதவியுடனும் மகளை ஈஸ்வரி படிக்க வைத்தார்.

இந்த நிலையில் செவ்வந்தி அடிக்கடி தாய் மற்றும் உறவினர்களிடம் கோபப்பட்டு வாக்குவாதம் செய்வார் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செவ்வந்தி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை தாய் கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த அவர் தாயுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் பதற்றமடைந்த ஈஸ்வரி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் மேற்கு போலீசில், தனது மகள் மாயமாகிவிட்டதாக அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஈஸ்வரியின் வீட்டருகே உள்ள திறந்தவெளி கிணற்றில் ஒரு பெண் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் மேற்கு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் பிணத்தை மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் பிணமாக கிடப்பது, கல்லூரி மாணவி செவ்வந்தி என்பதும், தாயார் திட்டியதால் மனமுடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story