புதுச்சேரி மூலக்குளத்தில் பேக்கரி கடையில் ரூ.6 லட்சம் திருடிய வாலிபர் கைது


புதுச்சேரி மூலக்குளத்தில் பேக்கரி கடையில் ரூ.6 லட்சம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 May 2019 3:30 AM IST (Updated: 9 May 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மூலக்குளத்தில் பேக்கரி கடையின் கூரையை பிரித்து ரூ.6 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்,

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ரெங்காநகர் 5–வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவர் மூலக்குளம் எம்.ஜி.ஆர். சிலை அருகே பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருடைய கடையில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் திருட்டு போனது. கடையின் பூட்டை உடைக்காமல் பணம் திருடிச் செல்லப்பட்டு இருந்ததால் கடையில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் மீது அவருக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது.

அதனால் அதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்காமல் அவரே பணத்தை திருடிய நபரை பிடிக்க முயற்சித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு பெருமாள் சொந்தவேலையாக சென்றுவிட்டார். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து அவர் கடையை திறந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்த திருட்டு குறித்து பெருமாள் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் பேக்கரி கடையை ஆய்வு செய்தபோது கடையின் சிமெண்ட் ஷீட் கூரை அகற்றப்பட்ட நிலையில் இருப்பது தெரிய வந்தது. எனவே அதன் வழியாக திருடன் உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருக்க வேண்டும் என்று கருதிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் 7 ஊழியர்கள் மற்றும் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பெருமாள் கடைக்கு அடிக்கடி வந்த சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் மதியழகன் (21) மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அவருடைய நடவடிக்கைகள் பறித்து போலீசார் தகவல்கள் சேகரித்ததில் மதியழகன் சமீபகாலமாக புதிதாக மோட்டார் சைக்கிள், தங்க நகைகள் வாங்கியிருப்பது தெரிய வந்தது. அதுபற்றி அறிந்ததும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

அதைத் தொடர்ந்து வாலிபர் மதியழகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பேக்கரி கடையில் 2 முறை பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த பணத்தில்தான் அவர் புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் வாங்கியிருந்ததையும், மீதி பணத்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து போலீசார் மதியழகனை கைது செய்தனர். பேக்கரி கடையில் அவர் திருடிய பணத்தில் வாங்கியதாக கூறப்படும் புதிய மோட்டார் சைக்கிள், 41 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றையும், வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.


Next Story