வேலூரில் நிதிநிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேரிடம் விசாரணை
வேலூரில் ரூ.5 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 24). இவர், கிரீன் சர்க்கிள் அருகே சர்வீஸ் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்த நந்தகுமாரை 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்றது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நந்தகுமாரை மர்மகும்பல் கடத்தி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
அதை வைத்து கடத்தல் கும்பலை பிடிக்கவும், நந்தகுமாரை மீட்கவும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. நந்தகுமாரை கடத்தி சென்ற கும்பல், நந்தகுமாரின் குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் நந்தகுமாரை கடத்திய கும்பல் அவரை காட்பாடி, லத்தேரி, கே.வி.குப்பம் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று பின்னர் விஷாரம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்ததும், அங்கு விட்டு விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் இரவு 10 மணி அளவில் நந்தகுமாரை மீட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நந்தகுமாரை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் நந்தகுமார் சம்பந்தப்பட்ட சம்பவம் பற்றிய ஒரு வீடியோ வெளியானதாகவும், அதை வைத்து அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தி சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story