மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன


மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 8 May 2019 9:59 PM GMT)

மீன்சுருட்டி பகுதியில் பலத்த காற்று வீசியதில் 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன.

மீன்சுருட்டி, 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது.

பலத்த காற்றின் காரணமாக, மீன்சுருட்டி அருகே மாதாபுரம் கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 3,500 வாழை மரங்கள் சாய்ந்தன. இதில் வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய பருவத்தில் இருந்தன.

இது குறித்து வாழை விவசாயி குழந்தைசாமி கூறுகையில், இந்த பகுதியில் அவ்வவ்போது ஏற்படும் மின் தடையை பொருட்படுத்தாமல் ஜெனரேட்டர் வைத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தேன். இதுவரை வாழை சாகுபடிக்கு ரூ.9 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் பலத்த காற்றில் வாழைகள் எல்லாம் சாய்ந்தன. வாழை சாகுபடி செய்வதற்காக நகையை அடகு வைத்துள்ளேன். தற்போது வாழைகள் சாய்ந்ததால், நிர்க்கதியாக நிற்கிறேன். எனவே வேளாண் அதிகாரிகள் வாழை சாய்ந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Next Story