ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கேட்ட உறுப்பினருக்கு அடி-உதை: போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கேட்ட உறுப்பினருக்கு அடி-உதை: போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 8 May 2019 11:34 PM GMT (Updated: 8 May 2019 11:35 PM GMT)

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கேட்ட உறுப்பினரை அடித்து உதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டத

ஈரோடு,

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 1,000–க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக பி.பி.கே.பழனிச்சாமி, செயலாளராக முருகுசேகர், பொருளாளராக வைரவேல் ஆகியோர் உள்ளனர்.

சங்கத்தில் மொத்தம் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை உறுப்பினர்களிடம் தாக்கல் செய்வதாக நிர்வாகிகள் நேற்று அறிவித்து இருந்தனர். இதனால் சங்க உறுப்பினர்கள் மார்க்கெட் பகுதியில் ஒன்று கூடினார்கள்.

அப்போது சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகளிடம், ‘சங்க வியாபாரிகளுக்கு வாங்கிய இடத்தின் நகலை உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டும். மார்க்கெட் ஏலம் எடுத்த குத்தகை கணக்கு, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் வசூல் செய்த கணக்கு, மார்க்கெட் சங்க கடை வாடகைக்கு விட்ட கணக்கு, தராசு ஏலம் விட்ட கணக்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளை காட்ட வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

இதனால் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து சங்க உறுப்பினரும், தக்காளி வியாபாரியுமான தர்மபுரியான் (வயது 58) என்பவரை, சங்க நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் சிலர் அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தர்மபுரியான் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் வரவு–செலவு கணக்கு கேட்டேன். அதற்கு சங்க நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் என்னை சிலர் அடித்து உதைத்ததோடு எனது சட்டையையும் கிழித்து விட்டனர். மேலும் அவர்கள் என்னையும், எனது மகன்களையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு அளித்து, என்னை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சங்கத்தில் இதுவரை ரூ.20 கோடி வரை மோசடி நடந்துள்ளது. அதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Next Story