98.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி: பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது


98.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி: பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது
x
தினத்தந்தி 8 May 2019 11:45 PM GMT (Updated: 8 May 2019 11:45 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 98.03 சதவீதம் தேர்ச்சியை பெற்று மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது.

ஈரோடு,

பிளஸ்–1 பொதுத்தேர்வில் 98.03 சதவீதம் தேர்ச்சியை பெற்று மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது.

தமிழகம் முழுவதும் பிளஸ்–1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 219 பள்ளிக்கூடங்களில் இருந்து 23 ஆயிரத்து 30 மாணவ–மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் 22 ஆயிரத்து 577 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.03 சதவீதமாகும்.

இதன் மூலம் தமிழக அளவில் அதிக மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்ற மாவட்டம் என்ற பெருமையை ஈரோடு பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்தது. ஏற்கனவே பிளஸ்–2 பொதுத்தேர்வில் 2–ம் இடத்தையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 4–வது இடத்தையும் பிடித்து இருந்த ஈரோடு மாவட்டம் பிளஸ்–1 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மற்ற மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் 99 அரசு பள்ளிக்கூடங்கள், 2 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கூடங்கள், 6 நகரவை பள்ளிக்கூடங்கள், 12 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 23 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 77 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என்று 219 பள்ளிக்கூடங்களில் படித்த 10 ஆயிரத்து 803 மாணவர்களும், 12 ஆயிரத்து 227 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 10 ஆயிரத்து 519 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.37 சதவீதமாகும். மாணவிகள் 12 ஆயிரத்து 58 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.62 சதவீதமாகும். தேர்வு எழுதிய மாணவர்களை விட மாணவிகள் அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை 9 ஆயிரத்து 700 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியதில் 9 ஆயிரத்து 406 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.97 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக தேர்ச்சி விகிதம் 97.28 ஆக இருந்தது. அது இந்த ஆண்டு 98.03 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுபோல் அரசு பள்ளிக்கூடங்கள் தேர்ச்சி விகிதம் 95.6 ஆக இருந்தது. இந்த ஆண்டு 96.97 ஆக உயர்ந்து இருக்கிறது. மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு 99.62 சதவீதம் தேர்ச்சி இருந்தது. அது இந்த ஆண்டு 99.42 சதவீதமாக குறைந்து உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு 89.53 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 79.22 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் 115 பள்ளிக்கூடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளன. இதில் அரசு பள்ளிக்கூடங்கள் 36 ஆகும். மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் 55, நகரவை பள்ளிக்கூடங்கள் 2, அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் 3, சுயநிதி பள்ளிக்கூடங்கள் 19 என 100 சதவீத தேர்ச்சியை வழங்கி உள்ளன.

நேற்று பிளஸ்–1 பொதுத்தேர்வுகள் வெளியானதும், மாணவ–மாணவிகள் வழங்கி இருந்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டது. அந்தந்த பள்ளிக்கூடங்களிலும் தேர்ச்சி பட்டியல் ஒட்டப்பட்டது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்பட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ–மாணவிகள் திரளாக வந்து தேர்வு முடிவு பட்டியலை பார்வையிட்டதுடன், ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் தங்கள் பள்ளிக்கூடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற நண்பர், தோழி யார் என்று தெரிந்து அவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்கள்.

தேர்வு முடிவு குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி கூறியதாவது:–

பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. இதற்கு சிறப்பாக உழைத்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும் நன்றாக படித்து தேர்வு எழுதிய மாணவ–மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிளஸ்–1 வகுப்பில் சில பாடங்கள் தோல்வி அடைந்த மாணவ–மாணவிகள் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் வழக்கம்போல பிளஸ்–2 வகுப்புக்கு செல்லலாம். வருகிற ஜூன் மாதம் நடைபெறும் உடனடி தேர்வில் அவர்கள் சிறப்பாக பரீட்சை எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே அதில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்றால், பிளஸ்–2 பொதுத்தேர்வை உற்சாகமாக எதிர்கொள்ளலாம்.

சிறந்த மாணவர்களை கொண்டு பிளஸ்-2 வகுப்பை அடுத்து எதிர்கொள்ளப்போகும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் தங்கள் பாடத்தில் அனைத்து மாணவ–மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்தால், மிகவும் சிறப்பான தேர்ச்சியை பெற முடியும். எனவே தலைமை ஆசிரியர்களும், ஆசிரிய–ஆசிரியைகளும் மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்தி படிக்க வைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி கூறினார்.



Next Story