நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 May 2019 4:00 AM IST (Updated: 9 May 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களிடம் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 6 ஆண்டுகள் போன்ற திட்டங்களில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தால் அவர்களுக்கு முடிவில் அதிகப்படியான தொகை தரப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதை நம்பிய திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, பெரியக்குப்பம், பட்டரை, ஒண்டிக்குப்பம், திருமழிசை, வெள்ளவேடு, பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த நிதிநிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். இதில் முகவர்கள் வைத்தும் அந்த நிதி நிறுவனத்தினர் பணம் வசூல் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிதிநிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு தொகை செலுத்த வேண்டியிருந்தது. அதை பெறுவதற்காக பணம் செலுத்தியவர்கள் சென்றபோது அந்த நிதிநிறுவனத்தினர் சரியான பதில் எதுவும் சொல்லாமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் நிதிநிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இவ்வாறாக அந்த தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை நிதிநிறுவனத்திற்கு சென்றும் எந்த பயனும் இல்லை.

இந்ந நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்று தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த தனியார் நிதிநிறுவனத்தினர் வழங்கிய பத்திரங்களை கையில் வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story