சூளகிரி அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து நாசம் 28 பயணிகள் உயிர் தப்பினர்


சூளகிரி அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து நாசம் 28 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 9 May 2019 5:23 PM GMT)

சூளகிரி அருகே தனியார் சொகுசு பஸ் எரிந்து நாசம் ஆனது. இதில் 28 பயணிகள் உயிர் தப்பினார்கள்.

ஓசூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தனியார் சொகுசு பஸ் 28 பயணிகளுடன் திருப்பூருக்கு புறப்பட்டது. அந்த பஸ்சை திருப்பூர் பகுதியை சேர்ந்த சவுகத் (57) என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சின்னார் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்சின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த சவுகத் உடனடியாக சின்னார் முனியப்பன் கோவில் அருகில் பஸ்சை நிறுத்தினார். அந்த நேரம் பஸ்சின் மேற்கூரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் திடீரென தீப்பிடித்தது.

இதைத் தொடர்ந்து டிரைவர் மற்றும் கிளனர் பஸ்சில் இருக்கையில் உறங்கி கொண்டிருந்த பயணிகளை எழுப்பினார். பின்னர் அவர்கள் உடனடியாக தங்களின் உடமைகளுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். இதற்கிடையே பஸ் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுமையாக எரிந்து எலும்பு கூடானது.

டிரைவரின் துரித செயலால் 28 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்கள். தீயில் எரிந்த பஸ் படுக்கை வசதி கொண்டதாகும். குளிர்சாதன வசதி கொண்ட அந்த பஸ்சில் உள்ள குளிர்சாதன எந்திரத்தில் தீப்பிடித்து அதன் மூலம் தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து காரணமாக ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story