கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மனைவியுடன் மு.க.ஸ்டாலின் படகு சவாரி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மு.க.ஸ்டாலின் அவருடைய மனைவியுடன் படகு சவாரி செய்தார்.
கொடைக்கானல்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அங்கு பிரசாரத்தை முடித்து கொண்டு மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக கடந்த 8-ந்தேதி நள்ளிரவு கொடைக்கானலுக்கு வந்தார். அவருடன் மனைவி துர்காவும் வந்திருந்தார்.
அவரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஏரிச்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளார். இதை தொடர்ந்து நேற்று மதியம் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் நட்சத்திர ஏரிக்கு வந்தார். அங்கு அவர் மனைவியுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
நட்சத்திர ஏரி பகுதியில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வினர் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து கொண்டனர். 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு புறப்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story