மரணத்திலும் இணை பிரியாத தம்பதி, கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு - தேனியில் உருக்கமான சம்பவம்
தேனியில் கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.
தேனி,
தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 90). இவருடைய மனைவி ராஜம்மாள் (79). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
முருகேசன் தலைச்சுமையாக ஜவுளியை சுமந்து சென்று, வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சில ஆண்டுகளாக அவர் வியாபாரத்துக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை ராஜம்மாள் கவனித்து வந்தார்.
இந்தநிலையில் வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலையில் முருகேசன் உயிரிழந்தார். இது ராஜம்மாளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையொட்டி கணவர் இறந்த 2 மணி நேரத்தில் அவரும் மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ராஜம்மாள் உடலையும் அவரது கணவர் உடலுக்கு அருகில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாழும் போது ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதியினர், மரணத்திலும் இணை பிரியவில்லை என்ற உருக்கமான நிகழ்வு அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரின் உடல்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று, தேனி எரிவாயு தகன மேடையில் ஒன்றாக தகனம் செய்ய உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story