குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதவள்ளிக்கு 23-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு


குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதவள்ளிக்கு 23-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 2 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அமுதவள்ளியின் நீதிமன்ற காவலை வருகிற 23-ந் தேதி வரை நீட்டித்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர்(நர்சு) அமுதவள்ளி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளியை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி ஆகியோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அமுதவள்ளியை காவலில் எடுத்து 2 நாட்கள் முடிவடைந்ததால் நேற்று மாலை 5 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து அமுதவள்ளியின் நீதிமன்ற காவலை 23-ந்தேதி வரை நீட்டிப்பு செய்த நீதிபதி கருணாநிதி, அன்றே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அமுதவள்ளி சேலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னதாக நேற்று காலை குழந்தைகள் விற்பனை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹசீனா மற்றும் பர்வீனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி, இருவரையும் ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஹசீனா மற்றும் பர்வீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story