போலி ஏ.டி.எம். கார்டு வழக்கு: தப்பி ஓடிய பல்கேரியா நாட்டு கொள்ளையன் கைது


போலி ஏ.டி.எம். கார்டு வழக்கு: தப்பி ஓடிய பல்கேரியா நாட்டு கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 10 May 2019 4:45 AM IST (Updated: 10 May 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

போலி ஏ.டி.எம். கார்டு வழக்கில் தப்பி ஓடிய பல்கேரியா நாட்டு கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) என்பவர் தனது நண்பருடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அறையை காலி செய்யும்போது, அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள், இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின்பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார். அப்போது அவருடன் வந்த நண்பர் தப்பிவிட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பீட்டரும், அவரது நண்பரும் போலியாக ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ஸ்கிம்மர் கருவிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் பீட்டர் ஒப்படைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பல்கேரியா நாட்டு கொள்ளையன் பீட்டர் கைதானார். தப்பி ஓடிய அவரது நண்பரான இன்னொரு பல்கேரியா நாட்டு கொள்ளையன் லயன் மார்கோவா என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இருவரும் சேர்ந்து சென்னையில் தங்கி போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story