ஈரோட்டில் பெயிண்டர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்


ஈரோட்டில் பெயிண்டர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
x
தினத்தந்தி 9 May 2019 9:45 PM GMT (Updated: 2019-05-10T00:50:57+05:30)

ஈரோட்டில் பெயிண்டர் கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் அவர்கள் போலீசில் சிக்கினர்.

ஈரோடு, 

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 37). பெயிண்டர். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நாடார்மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மது அருந்த சென்றார். மதுவை வாங்கிய அவர்கள் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்தனர்.

பின்னர் போதை தலைக்கேறியதும் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுநாதனின் வயிற்றில் குத்தினார். வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மஞ்சுநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மஞ்சுநாதன் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டனர்.

அப்போது மஞ்சுநாதனை குத்தியது அவருடைய நண்பர்களான ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்த செந்தில் குமார் (வயது 42), நாடார்மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் (45), பச்சப்பாளியை சேர்ந்த தாமோதரன் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story