பெரம்பலூரில் பாலியல் புகார் தொடர்பாக போலி ஆடியோ வழக்கில் கைதான வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெரம்பலூரில் பாலியல் புகார் தொடர்பாக போலி ஆடியோ வழக்கில் கைதான வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை புகார் தொடர்பாக போலி ஆடியோ வழக்கில் கைதான வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர், 

வேலை வாங்கி தருவதாக கூறி பெரம்பலூரில் இளம்பெண்கள் பலரிடம் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நல சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2-வது பதிவான வழக்கு தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக போலி ஆடியோ தொடர்பான வழக்கில் உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த கலையரசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வக்கீல் அருளுக்கு ஜாமீன் கேட்டு, அவருடைய தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரன், வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதற்கிடையே பெரம்பலூர் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு ஆதாரமாக வக்கீல் அருள் தனது அலுவலகத்தில் பணிபுரிந்த கலையரசியை செல்போனில் பேச வைத்து போலி செல்போன் ஆடியோவை வெளியிட்டதால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வக்கீல் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் சாந்தா அதை ஏற்று, வக்கீல் அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான நகலை, திருச்சி மத்திய சிறையில் உள்ள வக்கீல் அருளிடம் போலீசார் வழங்கினர்.

Next Story