சிறுவாச்சூரில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் டீசல் சாலையில் ஓடியது பொதுமக்கள் குடம், வாளிகளில் பிடித்து சென்றனர்
சிறுவாச்சூரில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில் டீசல் சாலையில் ஓடியது. இதைக்கண்ட பொதுமக்கள் வீடுகளில் இருந்து குடம், வாளிகளை கொண்டு வந்து டீசலை பிடித்து சென்றனர்.
பெரம்பலூர்,
சென்னையில் இருந்து ஒரு டேங்கர் லாரி 24 ஆயிரம் லிட்டர் டீசலை நிரப்பிக்கொண்டு, திருச்சியில் உள்ள விற்பனை நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த லாரியை டிரைவர் விழுப்புரம் மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் அகிலன்(வயது 27) ஓட்டினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் நேற்று அதிகாலை 6 மணியளவில் அந்த லாரி வந்தது.
அப்போது அந்த டேங்கர் லாரிக்கு முன்னால் சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை, அதன் டிரைவர் திடீரென்று திருப்பினார். இதைக்கண்ட அகிலன், சரக்கு ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்து லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அகிலனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் லாரி கவிழ்ந்ததில் டேங்கரில் இருந்து டீசல் வெளியேறி சாலையில் வெள்ளம்போல் ஓடியது. இதனை கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கும், பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே லாரியில் இருந்து வெளியேறிய டீசலையும், சாலையில் ஓடிய டீசலையும் பொதுமக்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த குடம், வாளிகள் போன்றவற்றில் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சாலையில் லாரி கவிழ்ந்து கிடந்ததால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக டேங்கரில் இருந்து வெளியான டீசலை நிறுத்தினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நின்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.
இதையடுத்து 3 கிரேன்கள் உதவியுடன் போலீசார் டேங்கர் லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இதற்கிடையே டேங்கர் லாரியில் இருந்து வெளியாகி சாலையில் படிந்த டீசலால், தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தண்ணீரில் அதற்கான நுரையை கலந்து அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பீய்ச்சி அடித்தனர். டேங்கர் லாரியில் இருந்து சுமார் 400 லிட்டர் டீசல் சாலையில் ஓடி வீணாகியிருக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சியில் இருந்து வேறொரு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு, அதில் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த டீசல் நிரப்பப்பட்டு, திருச்சி கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story