தேர்தல் பிரசாரத்தின் போது சி.எஸ்.சிவள்ளியை நினைத்து கண்ணீர் விட்டு அழுத மந்திரி டி.கே.சிவக்குமார்


தேர்தல் பிரசாரத்தின் போது சி.எஸ்.சிவள்ளியை நினைத்து கண்ணீர் விட்டு அழுத மந்திரி டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-10T02:50:16+05:30)

குந்துகோல் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது மந்திரி டி.கே.சிவக்குமார், மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளியை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பெங்களூரு, 

குந்துகோல் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது மந்திரி டி.கே.சிவக்குமார், மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளியை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஸ்ரீராமுலு குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எஸ்.சிவள்ளி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் மந்திரியாகவும் பதவி வகித்து வந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு சி.எஸ். சிவள்ளியின் மனைவி குசுமாவதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைவதற்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த நெருக்கடி மற்றும் தொல்லை தான் காரணம் என்று பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

கண்டிக்கத்தக்கது

இதுகுறித்து குந்துகோல் தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைவதற்கு கூட்டணி அரசு தான் காரணம் என்று ஸ்ரீராமுலு கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. கூட்டணி அரசு மீது அவர் கூறிய குற்றச்சாட்டு, சி.எஸ்.சிவள்ளியை நாங்கள் கொலை செய்து விட்டது போல உள்ளது. இடைத்தேர்தலில் மக்களை திசை திருப்ப இதுபோன்று ஸ்ரீராமுலு பேசியுள்ளார்.

அவர் மீது காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையம், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உண்மை எது என்று தெரிய வேண்டும் என்பதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை முதல்-மந்திரி குமாரசாமி வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்,’ என்றார்.

கண்ணீர் விட்டு அழுதார்

இந்த நிலையில், குந்துகோல் தொகுதியில் போட்டியிடும் சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதியை ஆதரித்து இங்கலகி கிராமத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசும் போது திடீரென்று சி.எஸ்.சிவள்ளியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.

முன்னதாக மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுகையில், ‘சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் எனது நெருங்கிய நண்பர். சி.எஸ்.சிவள்ளி குந்துகோல் தொகுதி மக்களுடன் தான் இருக்கிறார். இந்த தொகுதி மக்களின் மனதில் இருக்கிறார். அவர், சாதி, மதம் பார்த்து யாருடனும் பழகுவதில்லை. இந்த தொகுதி சி.எஸ்.சிவள்ளிக்கு உரியது. அவரது மனைவியை வெற்றி பெற செய்யுங்கள்’ என்றார்.

Next Story