பெண்ணாடம், மகா மாரியம்மன் கோவிலில் 3½ பவுன் நகை, உண்டியல் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெண்ணாடத்தில் மகாமாரியம்மன் கோவிலில் 3½ பவுன் நகை மற்றும் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்வதற்காக பூசாரி கண்ணன், அவரது மகன் முகேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் சென்றனர்.
அப்போது அங்கு கோவிலின் உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை, பூஜை செய்யபயன்படுத்தப்பட்ட பித்தளை பாத்திரங்கள் மற்றும் உண்டியல் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவில் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் கோவிலின் உள்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளை போன உண்டியலில் ரூ.10 ஆயிரம் இருந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story