சூறைக்காற்றுடன் பலத்த மழை: மாயனூர், கட்டளை பகுதியில் 50 மின்கம்பங்கள் சாய்ந்தன தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி


சூறைக்காற்றுடன் பலத்த மழை: மாயனூர், கட்டளை பகுதியில் 50 மின்கம்பங்கள் சாய்ந்தன தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 9 May 2019 9:49 PM GMT)

மாயனூர், கட்டளை பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 50 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர், கட்டளை பகுதிகளில் கடந்த 7-ந்தேதி மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்த பசுமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 9-ந்தேதி காலையில் மாயனூர் மற்றும் புலியூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விவசாய நிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மின்கம்பங்களை புதியதாக நட்டு மின் இணைப்பு கொடுக்க வேண்டியுள்ளதால் பணி முடிவடைய தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்று மாலை வரை அந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் கடந்த 3 நாட்களாக மாயனூர், கீழமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை, மேலமாயனூர், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் இரவில் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக ஊராட்சி மின்மோட்டார்கள் இயக்கப்படாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் பரிமாற்றத்திற்கு அத்தியாவசிய தேவையான செல்போன்கள் சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டும் என்று காலையில் தொடங்கி இரவு வரை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்று (நேற்று) மாலைக்குள் பணிகளை முடித்து விடவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு இரவு பெரும்பாலான பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும் என்றனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- க.பரமத்தி- 27, கரூர்-24, குளித்தலை-23, அரவக்குறிச்சி-19, மயிலம்பட்டி-19, மாயனூர்-17, கிருஷ்ணராயபுரம்- 16, அணைப்பாளையம்-13, பால விடுதி-4, பஞ்சப்பட்டி-3, தோகைமலை-2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Next Story