வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 9 May 2019 10:15 PM GMT (Updated: 2019-05-10T03:24:09+05:30)

அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கரூர், 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 250 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், ஒரு வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் மூன்று வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதனடிப்படையில் மொத்தம் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்களிலும் பணிபுரிய 1,218 நபர்களுக்கு பணி ஒதுக்கீடுசெய்யப்படுவதற்கான முதற்கட்ட கணினி முறையிலான குலுக் கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் கடந்த மாதம் 24-ந்தேதி அன்று நடத்தப்பட்டது. பின்னர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீஹரி பிரதாப் சாஹி முன்னிலையில்2-ம் கட்டமாக கணினி முறையில் குலுக்கலை மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் நடத்தினார். அதனடிப்படையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் மூன்று துணை அலுவலர்கள் நியமிக்கப்படுவார் கள்.

வாக்குச்சாவடி மையத்தில், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிசந்திரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story