தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நிபந்தனையுடன் நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு நிபந்தனையுடன் நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 10 May 2019 3:28 AM IST (Updated: 10 May 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நிபந்தனையுடன் நினைவஞ்சலி கூட்டம் நடத்தலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க, சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்தக் கெடு முடிந்தும், விசாரணை தொடர்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு இடத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் கடந்த மாதம் 26-ந்தேதி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை.

அந்த மனு அடிப்படையில் வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கூட்டம் நடத்துவது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே வேறொரு நாளில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “நினைவஞ்சலி கூட்டத்தை தனியார் ஓட்டலில் அமைதியான முறையில் நடத்த உள்ளோம்“ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், “நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தூத்துக்குடி பெல் ஓட்டலில் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கூட்டத்தில் அதிகபட்சமாக 250 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். போலீசாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டத்தை நடத்த வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story