லாரி டிரைவர் கொலையில் கைதான மனைவி சிறையில் அடைப்பு ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


லாரி டிரைவர் கொலையில் கைதான மனைவி சிறையில் அடைப்பு ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 May 2019 5:20 AM IST (Updated: 10 May 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து துறை அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் கமலக்கண்ணன் பிணமாக மீட்கப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஸ்டெல்லா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் புதுவை 100 அடி ரோட்டில் போக்குவரத்து துறை அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்குமூட்டையில் கமலக்கண்ணன் பிணமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், வீரபுத்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமலக்கண்ணனை அவருடைய மனைவி ஸ்டெல்லா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், தனது கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதால் பழச்சாறில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்து, உடலை கழிவுநீர் வாய்க்காலில் வீசியது தெரியவந்தது.

மேலும் கமலக்கண்ணனை கொலை செய்ய ஸ்டெல்லாவின் சகோதரி ரெஜினா மற்றும் ரவுடி தமிழ்மணி, அவருடைய கூட்டாளிகள் 2 பேரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டெல்லாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தமிழ்மணி, அவருடைய கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story