மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது


மாமூல் தர மறுத்ததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 May 2019 11:00 PM GMT (Updated: 10 May 2019 5:36 PM GMT)

மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை கஜலட்சுமி காலனியை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தாரா. இவர், அமைந்தகரையில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகுமார் பிரியாணி கடையை பார்த்து வந்தார். இரவு கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த படையப்பா என்ற வெங்கடேசன்(35) என்பவர் சிவகுமாரிடம் மாமூல் கேட்டார்.

ஆனால் அவர் மாமூல் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரின் முகத்தில் குத்தி கிழித்தார். இதனால் சிவகுமார் வலியால் கதறி துடித்தார். உடனே வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அருகில் இருந்த பொதுமக்கள் சிவகுமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சிவகுமார், இதுபற்றி அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் தலைமையிலான போலீசார், தலைமறைவான வெங்கடேசனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அமைந்தகரை பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தால் சிவகுமாரின் முகத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூல் செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் கைதான வெங்கடேசனை சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஆட்டோ மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story