விழுப்புரம் பகுதியில், மின்தடையால் பொதுமக்கள் அவதி - தண்ணீரின்றி பயிர்களும் கருகின


விழுப்புரம் பகுதியில், மின்தடையால் பொதுமக்கள் அவதி - தண்ணீரின்றி பயிர்களும் கருகின
x
தினத்தந்தி 10 May 2019 11:00 PM GMT (Updated: 10 May 2019 5:44 PM GMT)

விழுப்புரம் பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மின்மோட்டார்களை இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பயிர்களும் கருகின.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே கடந்த சில வாரங்களாக மின்தடை ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. விழுப்புரம் நகர்புற பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மதிய வேளையில் ஒரு மணி நேரமும், இரவு நேரங்களில் அவ்வப்போது திடீர், திடீரெனவும் மின்தடை ஏற்படுகிறது. அதுபோல் காணை, பெரும்பாக்கம், பிடாகம், குச்சிப்பாளையம், கோலியனூர், சாலைஅகரம், வளவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.

அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரையும், இரவு 11 மணி முதல் 12 மணி வரையும், சில சமயங்களில் இரவு நேரங்களில் கூடுதலாக ஒரு மணி நேரமும் மின்தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால் வீட்டில் உள்ள மின் விசிறிகளை இயக்க முடியவில்லை. இதனால் ஏற்படும் புழுக்கத்தால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தூக்கத்தை தொலைத்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் காலை வேளையிலும் திடீர், திடீரென மின்தடை ஏற்படுவதால் பெண்கள், வீட்டு சமையல் வேலைகளை விரைந்து முடிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

மேலும் தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிற நிலையில், இந்த மின்தடை காரணமாக கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் முழுமையாக தண்ணீரை நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தொடர் மின்தடை காரணமாக கிராமப்புறங்களில் மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே இதில் மின்வாரியத்துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி தடையின்றி மின் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story