திண்டிவனம் அருகே, மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
திண்டிவனம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
மயிலம்,
சென்னையில் உள்ள குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை விழுப்புரம் அய்யனார் பாளையத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 1 மணியளவில் அந்த லாரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, தடுப்புகட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் சுந்தரம் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாரி முழுவதும் தார்பாய் சுற்றப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் பெருமளவில் சேதமடையவில்லை. 25 சதவீத அளவிற்கு மதுபாட்டில்கள் உடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story