ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 11 May 2019 4:45 AM IST (Updated: 10 May 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, போடூர்பள்ளம் மற்றும் ஏ.செட்டிப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போடூர்பள்ளம் மற்றும் ஏ.செட்டிப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் இருந்து 12 யானைகள் வெளியேறி அருகில் உள்ள ஆலூர் தின்னூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தன. தொடர்ந்து அவைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று கிராம மக்கள் ஒத்துழைப்புடன் பட்டாசு வெடித்து அந்த யானைகளை, பேரண்டபள்ளி காட்டுக்கு விரட்டியடித்தனர். நேற்று காலை வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீத்தப்பா (வயது 45) என்பவர் தனது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த யானை ஒன்று சீத்தப்பாவை விரட்டியது. அங்கிருந்து தப்பி ஓடிய அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பேரண்டபள்ளி காட்டில் 12 யானைகளும், சானமாவு வனப்பகுதியில் 9 யானைகளும் முகாமிட்டுள்ளன. யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
1 More update

Next Story