பாளையங்கோட்டையில் வீரசக்கதேவி ஜோதி ஊர்வலம் போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு
பாளையங்கோட்டையில் வீரசக்கதேவி ஜோதி ஊர்வலத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் வீரசக்கதேவி ஜோதி ஊர்வலத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வீரசக்கதேவி ஜோதி ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் இருந்து வீரசக்கதேவி ஜோதி ஊர்வலமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவ சிலைக்கு நேற்று காலையில் ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள், வீரசக்கதேவி ஜோதியை ஏந்தியவாறும், வாள், அரிவாள் உள்ளிட்ட பாரம்பரிய ஆயுதங்களை ஏந்தியவாறும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
உடனே பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஜோதியை மட்டும் எடுத்து செல்லுங்கள், ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆனாலும் ஊர்வலத்தில் சென்றவர்கள், பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு செல்வதுதான் எங்களுக்கு பெருமை என்று கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த வாள், அரிவாள் உள்ளிட்ட பாரம்பரிய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர்கள், போலீசாரை கண்டித்து, சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அங்கு எந்த ஆயுதங்களையும் ஏந்தி செல்லக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, ஜோதியுடன் வீரசக்கதேவி ஆலயத்துக்கு சென்றனர்.
Related Tags :
Next Story