அரசு பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்


அரசு பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்
x
தினத்தந்தி 11 May 2019 4:15 AM IST (Updated: 11 May 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அரசு பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் அறையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதில் தலைமை ஆசிரியர் அறையில் 10 பீரோவில் இருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது.

மேலும் தலைமை ஆசிரியர் அறையின் ஒரு சுவரும் இடிந்து விழுந்தது. அதே போல தலைமை ஆசிரியர் அறையையொட்டி உள்ள கழிவறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் யாரேனும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்களா? அல்லது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் காரணமாக சூளகிரி பகுதியில் 2-வது நாளாக பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையே சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களிடம் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்தனர்.

Next Story