ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல மண்சாலை அமைக்கும் பணி தீவிரம்
ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல மண் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு பிரச்சினைகளை தாண்டி கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு சிலையுடன் கூடிய லாரி வந்தது.
பின்னர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 3 மாதம் சிலை, சாமல்பள்ளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தற்்காலிக பாலம் மற்றும் மண் பாதை அமைக்கப்பட்டு கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை அங்கிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால், சிறிது தூரம் சென்றவுடன் லாரி டயர்கள் பஞ்சர் ஆனதால், அதை சரி செய்வதற்காக அன்று இரவு இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மண் சாலையை சமப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த பணி முடிவடைந்த போதிலும், திடீரென சிலை ஏற்பாட்டாளர்களுக்கும், சிலையை கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், மேற்கொண்டு சிலையை பெங்களூரு நோக்கி கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கோதண்டராமர் சிலை, சின்னாரிலேயே நிறுத்தப்பட்டது.். இதனிடையே, சிலை ஏற்பாட்டாளர்கள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குமிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று, சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, சிலையுடன் கூடிய லாரி சின்னாரிலிருந்து புறப்பட்டது. வழியில் கொல்லப்பள்ளி, சூளகிரி ஆகிய ஊர்களை கடந்து கோனேரிப்பள்ளி என்ற இடத்திற்கு வந்தடைந்தது.
நேற்று முன்தினம் சிலை அங்கிருந்து புறப்பட்டு, காமன்தொட்டி வழியாக கோபசந்திரம் வந்தது. இந்தநிலையில் அங்கு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த மண் பாதையில் லாரி டயர்கள் சிக்கிக்கொண்டதால், மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சாலையை சமப்படுத்தி லாரி அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் அருகே பேரண்டபள்ளியை அடைந்தது.
இந்தநிலையில், லாரி டயர்கள் பஞ்சராகி விட்டதாலும், இணைப்பு சங்கிலி துண்டானதாலும் அவற்றை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து இன்று(சனிக்கிழமை) சிலையை கொண்டு செல்லும் லாரி ஓசூர் வழியாக பெங்களூரு நோக்கி புறப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பேரண்டபள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் தென்பெண்ணை ஆற்றை, லாரி கடந்து செல்வதற்கு வசதியாக மண் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து, தரிசித்து சென்றனர்.
Related Tags :
Next Story