துரோகம் செய்து கட்சி கண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது: “அ.தி.மு.க. ஆட்சியை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது” ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு


துரோகம் செய்து கட்சி கண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது: “அ.தி.மு.க. ஆட்சியை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது” ஓ.பன்னீர்செல்வம் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 11 May 2019 3:30 AM IST (Updated: 11 May 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து கட்சி கண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது என்றும், அ.தி.மு.க. ஆட்சியை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் கூறினார்.

தூத்துக்குடி, 

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து கட்சி கண்டவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது என்றும், அ.தி.மு.க. ஆட்சியை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். அவர் வசவப்பபுரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல கட்சிகள் தமிழகத்தை ஆண்டு இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார். இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

வேலைவாய்ப்பு

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களையும் தந்தார். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது. ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. தொழில்வளர்ச்சி, விவசாயத்துறையிலும் பரிசு பெற்று உள்ளோம். எந்த குறையும் இல்லை. இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.

தீராத ஆசை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறோம். மக்கள் எங்களை நம்பி வாக்களித்துக் கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழுவதற்கான வழிமுறைகளையும், நடைமுறைகளையும் நிறைவேற்றி தருகிற மாநிலமாக தமிழகம் உள்ளது.

நல்ல தீர்ப்பு

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க.வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார். வேறு எந்த கட்சியிலும் வர முடியாது. அதனால் தான் இந்த இயக்கம் 1,000 ஆண்டுகள் ஆளும் என்று ஜெயலலிதா கூறினார்.

தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். நாங்கள் நல்லது செய்து கொண்டு இருக்கிறோம். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story