கூடலூர்- கேரள எல்லையில், சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி மீட்பு
கூடலூர்- கேரள எல்லையில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மீட்டனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நூல்புழா பேரூராட்சி சீராள் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமம் கூடலூர்- கேரள எல்லையில் உள்ளது. காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க கேரள வனத்துறையால் அகழி தோண்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அகழியில் இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது.
இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி ஒன்று தவித்து கொண்டிருந்தது. மேலும் பொதுமக்களை கண்டதும் சீறியது. உடனே அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் முத்தங்கா சரணாலய கால்நடை டாக்டர் அருண்சக்கரியா அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் 3 வயதுடைய அந்த பெண் சிறுத்தைப்புலிக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இதில் சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி மயக்கம் அடைந்தது. பின்னர் சுருக்கு கம்பியில் இருந்து சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மீட்டு வலையால் போர்த்தினர். மேலும் கூண்டில் சிறுத்தைப்புலி ஏற்றப்பட்டு முத்தங்கா சரணாலயத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த சிறுத்தைப்புலி அங்கிருந்து வேகமாக வனப்பகுதிக்குள் பாய்ந்தோடியது. அதன்பின்னரே சீராள் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story