திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு அங்கு தலைவிரித்தாடுகிறது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களது பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த பொதுமக்கள், திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலைக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து மட்டுமே கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சீரான குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக திண்டுக்கல்லில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீருக்காக கண்ணீர் வடித்த மூதாட்டி
கோடைகாலம் தொடங்கி விட்டாலே, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது திண்டுக்கல்லில் வாடிக்கையாகி விட்டது. விலை கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒய்.எம்.ஆர்.பட்டியில் குடிநீர் கேட்டு நேற்று மறியல் நடந்தது. அப்போது மறியலில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் தண்ணீருக்காக கண்ணீர் வடித்தார். வயதான காலத்தில் ஏங்கே போய் தண்ணீர் எடுப்பது என கூறி அந்த மூதாட்டி கதறி அழுத காட்சி, அனைவருடைய நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
Related Tags :
Next Story