திருச்சிக்கு வந்த விமானத்தில் கியாஸ் அடுப்பில் மறைத்து கடத்திய ரூ.18½ லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்

திருச்சிக்கு வந்த விமானத்தில் கியாஸ் அடுப்பில் மறைத்து கடத்தி வந்த ரூ.18½ லட்சம் தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, கொச்சி, பெங்களூரு போன்ற உள்நாட்டின் பல இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. 24 மணி நேரமும் விமான சேவை உள்ளதால், திருச்சி விமானம் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருப்பதால் பரபரப்பாகவே காணப்படும்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் சில பயணிகள் நூதன முறையில் ஆபரண தங்கம் மற்றும் தங்கக்கட்டிகளை கடத்தி வரும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், அவற்றை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் அன்றாடம் நடக்கும் தொடர் கதையாகவே உள்ளது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் கொண்டு வந்த கியாஸ் அடுப்பில் தீ வரும் இரண்டு புறமும் உள்ள அடிப்பகுதியில் 580 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். பிடிபட்ட சக்கரவர்த்தியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






