பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கர்நாடக அரசின் சட்ட மசோதாவுக்கு அனுமதி


பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கர்நாடக அரசின் சட்ட மசோதாவுக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் கர்நாடக அரசின் சட்ட மசோதாவுக்கு அனுமதி அளித்திருப்பதுடன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு, 

பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் கர்நாடக அரசின் சட்ட மசோதாவுக்கு அனுமதி அளித்திருப்பதுடன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு

கர்நாடகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா உத்தரவிட்டார். அதே நேரத்தில் பதவி உயர்வில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

அந்த புதிய சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதே நேரத்தில் அந்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, புதிய சட்ட மசோதாவின் படி அரசு பணியில் இருந்த அந்த பிரிவுகளை சேர்ந்த 3,700 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

மேல் முறையீட்டு மனுக்கள்

அரசின் இந்த புதிய சட்ட மசோதாவுக்கும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். அதே நேரத்தில் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பி.கே.பவித்ரா உள்பட 18 பேர் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்கள். அந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான சந்திரசூட், லலித் ஆகிய 2 பேர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆண்டு(2018) அக்டோபர் 23-ந் தேதியில் இருந்து தொடர்ந்து அமர்வு நீதிபதிகள் முன்பு நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒத்திவைத்தது.

சட்ட மசோதாவுக்கு அனுமதி

இந்த நிலையில், மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் சந்திரசூட், லலித் வழங்கினார்கள். அப்போது பதவி உயர்வில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பி.கே.பவித்ரா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் 60 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story