பெரம்பலூர்-சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் 426 பேர் ஈடுபடுகின்றனர் தேர்தல் அதிகாரிகள் தகவல்
பெரம்பலூர்-சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணியில் மொத்தம் 426 பேர் ஈடுபடுகின்றனர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நாடாளுமன்ற தேர்தலன்று பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் (வி.வி.பேட்), கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஆகியவை, அன்றே வாக்கு எண்ணிக்கை மையமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அவை அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளையும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தையும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 பேர் ஈடுபட உள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், குளித்தலை தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், லால்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், முசிறி தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், துறையூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன, என்றார்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், பெரம்பலூர் தாசில்தார் சித்ரா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதேபோல் சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் ராமசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் என 120 பேர் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 17-ந்தேதி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்த சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படும். ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளரின் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த விவரங்களை ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது, என்றார்.
கூட்டத்தில் சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன், அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story