உடையார்பாளையம் பகுதியில் வறட்சியால் முந்திரி விளைச்சல் கடும் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை


உடையார்பாளையம் பகுதியில் வறட்சியால் முந்திரி விளைச்சல் கடும் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2019 3:45 AM IST (Updated: 11 May 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் பகுதியில் வறட்சியால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையார்பாளையம், 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உடையார்பாளையம், கழுமங்கலம், பிலாக்குறிச்சி, வீராகன், தத்தனூர், வெண்மாண்கொண்டான், ஆதிச்சனூர், கொலையனூர், மணகெதி, ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் முந்திரி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடையார்பாளையம் பகுதியில் உள்ள முந்திரி பருப்பு ஆலையில் இருந்து ஆண்டுதோறும் அதிக அளவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவமழை பொய்த்து போனதால் இப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு முந்திரி மரங்களில் பூக்களும், பிஞ்சுகளும் கருகிய நிலையில் உள்ளன.

இந்த மாதம் முந்திரி அறுவடை காலம் ஆகும். ஆனால் குறைந்்த அளவே முந்திரி விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். முந்திரி விளைச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் தேவையான அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்ய வழிவகை செய்து, முந்திரி போன்ற விவசாய தொழிலை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காப்பீடு திட்டத்தில் இந்த பயிர் இல்லாததால், அதில் முந்திரி பயிரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமே முந்திரி விவசாயம் தான். தற்போது கடுமையான வெப்பத்தினால் அடியோடு மரங்கள் கருகி முந்திரி விவசாயமே அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணம், உணவு, அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளனர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கினால் தான் நாங்கள் முந்திரி விவசாயத்தை தொடர முடியும், என்று கூறினார்கள்.

Next Story