ஈரோட்டில் 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி


ஈரோட்டில் 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் முருகன் வீதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 25). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சவுந்தர்யா (5) என்ற மகள் உள்ளார். ஜெயக்குமார் இறந்து விட்டதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த கோபால் (32) என்பவரை ரஞ்சிதா 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுகன்யா (3) என்ற மகள் உள்ளார்.

கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றதால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபாலுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்ட ரஞ்சிதா தனது மகள்களுடன் கணவரின் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் தனது மகள்களுடன் தெப்பக்குளம் முருகன் வீதியில் குடியேறினார்.

இந்தநிலையில் ரஞ்சிதா பழையபாளையத்தில் உள்ள தனது தங்கை ரஞ்சனி வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று கூறி புலம்பி உள்ளார். அதற்கு ரஞ்சனி அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீட்டுக்கு சென்ற அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நேற்று காலை 10 மணிஅளவில் ரஞ்சனியின் செல்போனுக்கு ரஞ்சிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை ஏற்று பேசியபோது, ரஞ்சிதா தனது 2-வது குழந்தையான சுகன்யாவுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதைக்கேட்டதும் பதறிப்போன ரஞ்சனி தனது தந்தை கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கண்ணன் ரஞ்சிதாவின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தார்.

அங்கு ரஞ்சிதாவும், சுகன்யாவும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கண்ணன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story