திருப்பூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணம்; கொலையா? போலீஸ் விசாரணை


திருப்பூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணம்; கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 May 2019 5:00 AM IST (Updated: 11 May 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக கிடந்தார். கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் காந்தி நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவனத்தில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர். தனது பனியன் நிறுவன தொழிலாளர்களுக்காக திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் வரிசையாக 10 வீடுகளை கட்டி உள்ளார். அதில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள 4-வது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம், பக்கத்து வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் இது குறித்து பனியன் நிறுவன அதிபர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் நேற்று மாலை திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

துர்நாற்றம் வந்த 4-வது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்ட இருந்தது. ஜன்னல் வழியே வீட்டுக்குள் பார்த்த போது இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். பின்னர் பூட்டை உடைத்து அந்த இளம்பெண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் பிணமாக கிடந்தது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி(வயது 21) என்பது தெரிய வந்தது. அவரது கணவர் விக்னேஷ்(22). இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கடந்த ஒரு ஆண்டாக இந்த வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கயல்விழி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்து உள்ளார். அவரது கணவர் விக்னேஷையும் காணவில்லை. இதனால் கயல்விழி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் சந்தேக மரணமாக கருதி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரது கணவர் சிக்கினால் தான் அவரது சாவு குறித்து முழுவிவரம் தெரிய வரும்.

Next Story