திருப்பூர் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை


திருப்பூர் அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2019 5:00 AM IST (Updated: 11 May 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மனைவி பாத்திமா (வயது 37). இவர்களுடைய மகள் ஞானதர்ஷினி (16). அருளானந்தம் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சாமந்தாங்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஞானதர்ஷினி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார்.

கடந்த 29-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து ஞானதர்ஷினியும் தோழிகளுடன் சென்று தனது மதிப்பெண்ணை பார்த்துள்ளார். அப்போது அவர் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் 288 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி இருந்தார். அவருடன் படித்த தோழிகள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானதர்ஷினி கடும் மன வேதனை அடைந்தார்.

இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை தேறியதையடுத்து கடந்த 5-ந்தேதி ஞானதர்ஷினியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் 8-ந்தேதி மீண்டும் உடல்நிலை மோசமானதால் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story