தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க நீதிமன்றம் செல்வோம் - முத்தரசன்


தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க நீதிமன்றம் செல்வோம் - முத்தரசன்
x
தினத்தந்தி 10 May 2019 11:18 PM GMT (Updated: 10 May 2019 11:18 PM GMT)

4 சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்போம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:– தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பாரபட்சம் இல்லாமல் செயல்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறையின் செயல்பாடு எதிர்கட்சியினரை குறி வைத்தே இருந்து வந்தது. வேலூரில் துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வேறு இடங்களில் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டதை காரணம் காட்டி அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாடகைக்கு இருந்த வீட்டில் வாக்குபதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு வாக்காளர்களிடையே அவரது மதிப்பை குறைக்கும் வகையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு எதுவும் கைப்பற்றப்படவில்லை. நாகர்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. எதுவும் கைப்பற்றப்படவில்லை. 40 ஆயிரம் மீனவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லை என புகார் கூறியும் தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. தேனி தொகுதியில் பணமழை கொட்டியது. ஒரு திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 5 ஆயிரம் பெண்களுக்கு ரூ.500–ம், சேலையும் வழங்கப்பட்டு முடித்த பின்னர் தேர்தல் அதிகாரிகள் வந்து திருமண மண்டபத்துக்கு சீல்வைத்தனர்.

வாக்குபதிவுக்கு சில தினங்களுக்கு பின்பு 10 வாக்குசாவடிகளில் மட்டும் தவறு நடந்துள்ளதாகவும், அங்கு மறு வாக்குபதிவுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதில் தர்மபுரி தொகுதியில் 8 வாக்குசாவடிகளில் ஆளுங்கட்சி கூட்டணியினர் வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை என கூறி மறுவாக்குபதிவு நடக்கிறது.

இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்பு 44 வாக்குசாவடிகளில் தவறு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி தகவல் அனுப்புகிறார். கோவையில் இருந்து தேனிக்கு எந்த அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படாமல் 50 வாக்குபதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது வழக்கமாக நடைமுறை தான் என தலைமை தேர்தல் அதிகாரி கூறுகிறார். மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு தாசில்தார் நுழைந்து ஆவணங்களை எடுத்து சென்று 3 மணி நேரம் வெளியில் வைத்து நகல் எடுக்கிறார். ஒரு தாசில்தாரால் மட்டும் இதை செய்ய முடியாது. இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? மதுரை தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம் மூலம் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீதான நம்பக தன்மையை நாங்கள் இழந்துவிட்டோம். தலைமை தேர்தல் அதிகாரி மீது எதிர் கட்சிகள் புகார் கூறும் நிலையில் முதல்–அமைச்சர் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என கூறுகிறார். இதில் இருந்தே அவர் அளும்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவது உறுதியாகிறது.

இந்தநிலையில் 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்குபதிவுக்கு முன்பு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரி உள்ளோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுப்போம். அரவக்குறிச்சியிலும், ஓட்டப்பிடாரத்திலும் முதல்–அமைச்சர் பிரசாரத்துக்கு வருகிறார் என காரணம் கூறி எங்கள் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தேர்தல் அதிகாரி ரத்து செய்கிறார். பின்னர் நாங்கள் போராடி தான் அனுமதி பெற வேண்டி உள்ளது. மே தின ஊர்வலத்துக்கு கூட அனுமதி அளிக்காத தலைமை தேர்தல் அதிகாரி அன்றைய தினம் தடையை மீறி ஊர்வலம் செல்வோம் என அறிவித்த பின்னரே நள்ளிரவில் அனுமதி அளிக்கிறார். தமிழகத்தை பொருத்தமட்டில் வாக்காளர்களிடையே உள்ள மோடி எதிர்ப்பு உணர்வு எங்களுக்கு வெற்றியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன், நகர செயலாளர் காதர்மொய்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story