பாகூரில் திடீர் தீ விபத்து: 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
பாகூரில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின. அவற்றில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
பாகூர்,
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே குடிசை வீட்டில் வசித்து வருபவர் விஜயா (வயது 49), கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டார். பின்னர் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதனைக் கண்டதும் அவர் கூச்சல் போட்டார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மேலும் பரவியது.
இந்த தீ ‘‘மள மள’’வென பக்கத்தில் உள்ள அய்யப்பன் என்பவர் வீட்டுக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த வைக்கோல் போருக்கும் பரவியது.
இது குறித்து உடனடியாக பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி பக்கிரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்தன. மேலும் வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் தனவேலு எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அரசிடமிருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.