கல்லூரி மாணவி கொலை, பா.ம.க.வினர் சாலை மறியல்; போலீஸ் நிலையம் முற்றுகை - தொடர் போராட்டங்களால் விருத்தாசலம் அருகே பதற்றம்
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் திலகவதி. விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 8-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த திலகவதியை பேரளையூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (19) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். நேற்று முன்தினம் ஆகாசை கருவேப்பிலங் குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, நேற்று பா.ம.க. சார்பில் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
திலகவதி காதலிக்க மறுத்ததால், அவரை கொலை செய்த ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், நாடக காதல் கும்பலின் தூண்டுதலால் படுகொலை செய்யப்பட்ட திலகவதியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிவில் திடீரென பா.ம.க.வினர் மற்றும் திலகவதியின் உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த 19 வயது வாலிபர் ஒருவர், போலீசாரிடம் இந்த கூட்டத்தை உங்களால் கலைக்க முடியாதா என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்ட பா.ம.க.வினர் அந்த வாலிபரை தாக்க முயன்றனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து, வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அந்த வாலிபரை பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து போக தொடங்கினார். அந்த சமயத்தில் அங்கிருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பா.ம.க.வினர் சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு போலீஸ்காரரை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து பா.ம.க.வினர் மற்றும் திலகவதியின் உறவினர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு, விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒரு பிரிவினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து கோஷங்களை எழுப்பி, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தனிப்பிரிவு போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் அங்கு பதற்றம் நீடித்து வருவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story