மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2019 4:15 AM IST (Updated: 11 May 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள முத்திரை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது45). கூலித்தொழிலாளி.

இவருடைய மனைவி ஜோதி. மகேந்திரன் தினமும் மது அருந்தியதால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரை அவரது மனைவி கண்டித்தார்.

இதில் மனமுடைந்த மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story