பொறையாறு பகுதியில், வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி காய்கறி செடிகள் கருகும் அபாயம் - விவசாயிகள் கவலை
பொறையாறு பகுதியில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீரின்றி காய்கறி செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொறையாறு,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே கடந்த 2 மாதங்களாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து மேலும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே போதிய மழை இல்லாததால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இருந்தது. தற்போது வெயிலின் தாக்கத்தால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் விளை நிலங்கள் வறண்டு பாசனத்திற்கு தண்ணீரின்றி சாகுபடி செய்த பல்வேறு வகையான பயிர்கள் வெயிலில் காய்ந்து வருகிறது.
பொறையாறு அருகே காழியப்பநல்லூர், அனந்தமங்கலம், என்.என்.சாவடி, சிங்கனோடை, ஆணைக்கோவில், கீழையூர், ஆக்கூர், இலுப்பூர், மன்னம்பந்தல், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பீக்கங்காய், சுரைக்காய், கத்திரிக்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிப்பதால் புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் வெயிலில் வாடி வதங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் செல்வம், பழனியப்பன், பத்துக்கட்டு பிரபாகரன் ஆகியோர் கூறியதாவது:-
இந்த பகுதியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் காய்கறிகள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது வெயிலின் தாக்கத்தால் வறட்சி ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீரின்றி காய்கறி செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் மகசூல் குறைந்து விட்டது. இதனால் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயம் தொடர்ந்து பாதிப்படையும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story